சென்னையில் திருநங்கைகள் – அப்ஸரா ரெட்டிக்கான எதிர்வினை

அப்ஸரா ரெட்டி சென்னை நகரம் நடுநிசி இரவில் எப்படி இருக்கிறது என்று தனது காரில் சென்று பார்த்ததை பகலில் சென்று பார்த்திருந்தால் ஒருவேளை மிக மிக அதிக அளவு வாடகை கொடுத்து அதற்கு சிறிதும் தகுதி இல்லாத வீடுகளில் வாழும் திருநங்கைகளைப் பார்த்திருக்கலாம். வேலை வேண்டி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தும் திருநங்கைகளைப் பார்த்திருக்கலாம். தங்களுக்கான வேலைவாய்ப்பை வழங்குங்கள் அல்லது எங்களைக் கருணைக்கொலை செய்து விடுங்கள் எனப் போராடும் திருநங்கைகளைப் பார்த்திருக்கலாம். தனது சக திருநங்கையின் படிப்பிற்காக தாசில்தார் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய திருநங்கையைப் பார்த்திருக்கலாம். கல்லூரியில் படித்துக்கொண்டே வீடு தேடுவதை தின வேலைகளில் ஒன்றாகச் செய்யும் திருநங்கையைப் பார்த்திருக்கலாம். காவல் நிலையத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு உறுப்பில் லத்தி நுழைக்கப்பட்ட திருநங்கையப் பார்த்திருக்கலாம். காவலர் பணிக்கான அனைத்து தகுதிகள் இருந்தும் பணி செய்ய விடாமல் தடுக்கப்பட்ட திருநங்கையைப் பார்த்திருக்கலாம். ஆனால் அப்ஸரா ரெட்டிக்கு இரவு நேரத்தில் பிழைப்பிற்காக பாலியல் தொழில் செய்யும் திருநங்கைகளைப் பார்த்து அவர்களைப் பற்றி எழுதி விளம்பரம் தேடவே விருப்பமிருந்திருக்கிறது.

நிற்க… தலை முதல் கால் வரை உயர்தட்டு மனோபாவம் நிரம்பிய ஒருவராலேயே இப்படிப்பட்ட ஒரு பதிவை எழுத முடியும். “உனக்கு நான் வேலை தருகிறேன். செய்கிறாயா?” எனக் கேட்பதும் அதை ஒருவர் மறுப்பதை கேவலமாகப் பார்ப்பதும் என்ன மாதிரியான மனநிலை? அப்படி என்ன மாதிரியான வேலையை அப்ஸராவால் கொடுத்துவிட முடியும்? தன்னை ஒரு உயர்ந்த மனிதராக நினைத்து அப்ஸரா வழங்கிய வாய்ப்பை மறுத்தது முழுக்க அந்தத் திருநங்கையின் சுயமரியாதை சார்ந்த ஒன்று. அதைக் கேள்விக்குளாக்குவது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.

அடுத்து பாலியல் தொழில் ஒரு சமூக விரோத செயல் என்கிற அப்ஸராவின் கருத்து.. ஒருவேளை அப்ஸரா பார்த்த பாலியல் தொழில் செய்யும் திருநங்கைகளுக்கு அப்ஸராவிற்கு கிடைத்த வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருக்கலாம். அப்ஸரா அளவிற்கு அவர்கள் பயணம் எளிதாக இல்லாமல் இருக்கலாம். வெளிநாடு சென்று எட்டு மாதம் தங்கி பால்மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வாய்ப்பு இல்லாதவராக இருந்த்திருக்கலாம். ஒரு தேசியக்கட்சி, ஒரு மாநிலக்கட்சி என அடுத்தடுத்த மாதங்களில் இரண்டு அரசியல் கட்சிகளில் தன்னை இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கலாம். அந்த திருநங்கைகள் தனது அடிப்படை செலவிற்கான பணத்தை சம்பாதிக்க பாலியல் தொழில் செய்பவராக இருக்கலாம். உள்ளூர் மருத்துவமனைகளில் பால்மாற்று அறுவை சிகிச்சை செய்ய தேவைப்படும் பணத்திற்காக பாலியல் தொழில் செய்யலாம். அல்லது சுய விருப்பத்தின் பேரில் பாலியல் தொழில் செய்யலாம். இது ஒவ்வொரு தனிப்பட்ட நபருடைய விருப்பம் சார்ந்த்தது. இது பற்றி கருத்து சொல்ல அப்ஸராவிற்கோ யாருக்குமோ உரிமை இல்லை. ஒருவேளை அப்ஸராவிற்கு பாலியல் தொழில் மேல் வெறுப்பு இருந்தால் அவர் பாலியல் தொழில் செய்யாமல் இருக்கட்டும். அவ்வளவே.

திருநங்கைகளுக்கான உரிமை சார்ந்த போராட்டங்களில் தெருவிற்கு வந்து போராடுபவர்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் தொழில் செய்யும் திருநங்கைகளே. அவர்கள் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தையும் தனது elite இடத்தில் இருந்து அனுபவித்துக் கொண்டே அவர்களைக் காவல்துறை கைது செய்யவேண்டும் என்று கூறுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

காவல்துறை திருநங்கைகளை எவ்வாறு நடத்துகிறது என்பது அனைவருக்குமே தெரியும். காவல் துறையிடம் முறையான அனுமதி பெற்று நடத்தப்படும் சுயமரியாதைப் பேரணியிலும், அது தொடர்பான கலைநிகழ்ச்சிகளிலுமே காவல்துறையின் மூலம் சமூக மக்களுக்கு ஒரு அச்சுறுத்தலான சூழ்நிலையே நிலவுகிறது. இந்நிலையில் ஆண் காவலர்கள் வேண்டாமென்றால் பெண் காவலர்கள் பாலியல் தொழில் செய்யும் திருநங்கைகளைக் கைது செய்ய வேண்டும் என்கிற ஒரு மட்டமான யோசனையை சரியான மனநிலையில் இருக்கும் யாராலும் வழங்கமுடியாது.

திருநங்கைகள் சமுதாயத்தோடு இணைந்து சுயமரியாதையோடு வாழவேண்டும் என விளம்பரத்திற்காக யோசிக்காமல் உண்மையாகவே யோசித்திருந்தால் அவர் செய்ய வேண்டியது பொது சமூகத்தில் தனக்கு கிடைத்திருக்கும் இடத்தை பயன்படுத்தி திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் அவர் தன்னை இணைத்துக் கொண்ட கட்சி ஆட்சியில் இருக்கிறது, அவரது செல்வாக்கை பயன்படுத்தி திருநங்கைகள் நல வாரியம் முழு வீரியத்தோடு செயல்படச் செய்ய வேண்டும்.

அது முடியவில்லை எனில் குறைந்த பட்சம் தின்ற சோறு செரிக்காமல் நடு இரவில் சென்று சக சமூகத்தின் மீது சேற்றையாவது வாரி இறைக்காமல் இருக்கவேண்டும்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here